நேற்று பெய்த மழையில் முளைத்த விஷக்காளான் உதயநிதி - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
ஸ்டாலின்தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கிறார் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
காவிரி- சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்காக, முன்னாள் முதல்-அமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் சேலத்தில் இன்று(17.11.2024) பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு தான். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி எடுத்தது அதிமுக அரசு. அதிமுக அரசின் திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு கிடப்பில் போட்டு விட்டது. நாம் பெற்ற பிள்ளைக்கு பெயர் வைக்கும் வேலையை தான் முதலமைச்சர் செய்கிறார்.
உதயநிதி ஸ்டாலின்
கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஆட்சி செய்ய வேண்டும். விவசாயிகளை பற்றி திமுக அரசுக்கு கவலை இல்லை. தனக்கு என்ன வருமானம் கிடைக்கிறது என்பதே திமுகவின் நோக்கம்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி ஸ்டாலின். அப்பா மகனை புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவை புகழ்ந்து பேசுகிறார். இதுதான் வேடிக்கை. செல்வ செழிப்பில் வளர்ந்த உதயநிதிக்கே இவ்வளவு திமிர் என்றால், உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.
பாஜகவுடன் கூட்டணி வைக்க ஸ்டாலின்தான் முயற்சி செய்கிறார். ரெய்டு உங்களுக்குத்தான் வரும், எங்களுக்கு இல்லை. ரெய்டை பார்த்து எங்களுக்கு பயமில்லை. எதையும் எதிர்கொள்ளும் சக்தி அதிமுகவிற்கு உள்ளது. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை" என பேசினார்.