உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருக்கு : ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி புகார் ?
தமிழகத்தில் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. 9 மாவட்ட தேர்தலில் ஒரு மாவட்டத்தை கூட அதிமுகவால் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. 1,400 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 200 இடங்களை மட்டுமே கைபற்றியது.
அதிமுகவின் இந்த தோல்விகு திமுக அரசும் தேர்தல் ஆணையமும் தான் காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டை கூறிவருகின்றார்.
ஆளுங்கட்சி தேர்தல் ஆணையமும் இணைந்து முறைகேடு செய்ததால் அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என் ரவியைச் சந்தித்து 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்த அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்துவது குறித்தும் ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன