அண்ணாமலையுடன் எந்த பிரச்சனையும் இல்லை - அமித்ஷாவை சந்தித்த ஈபிஎஸ்!
அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானபிறகு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை. தமிழ்நாடு நிதியமைச்சர் தொடர்பாக வெளியான ஆடியோ அதிர்ச்சி அளிக்கிறது. அந்த ஆடியோ குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அமித்ஷாவுடன் சந்திப்பு
இந்த ஆடியோ அமைச்சரவையில் உள்ள தியாகராஜன் பேசியுள்ளார். ஆனால் இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து வாய் திறக்கவில்லை. மேலும், அந்த ஆடியோவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 30ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.
இதனை நாங்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஒரு சிலரைத் தவிர யாரை வேண்டுமானாலும் அதிமுகவில் இணைப்போம். ஓ. பன்னீர் செல்வம் மாநாடு நடத்துகிறார் என்றால் அது குறித்து நான் எப்படி கருத்து கூற முடியும். அது குறித்து ஓ. பன்னீர் செல்வத்திடம் தான் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.