அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி
தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
செங்கல்பட்டில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

இதில் பேசிய அவர், "திமுக என்ற தீய சக்தியை வேரோடு அகற்றவே அதிமுகவை எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். அதனை கட்டி காத்தவர் அம்மா. தீய சக்தி திமுகவை தமிழ்நாட்டிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம். திமுக ஆட்சி அகற்றப்படுவதற்கு இன்னும் 3 அமாவாசைகள்தான் மிச்சமுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு விழாவில் எனக்கு சேலஞ்ச் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுக 5% பணிகளை நிறைவேற்றியதாக பேசுகிறார். நீங்கள் பேசிய கள்ளக்குறிச்சியை மாவட்டமாக அறிவித்தது அதிமுக.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதில் 5 சதவீதம் தான் திமுக நிறைவேற்றி இருக்கிறது. ஆனால் அதிமுக தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை 95 சதவீதம் நிறைவேற்றி உள்ள திமுக தேர்தல் வாக்குறுதியில், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும், சம்பளம் உயர்த்தி தரப்படும் என சொன்னார்கள். உயர்த்தினார்களா?

100 நாள் வேலைத்திட்டத்தில் சம்பளம் முழுமையாக கொடுக்கவில்லை. வேலையை கூட முறையாக தரவில்லை. அதிமுக கொடுத்த கோரிக்கையின்படி 100 நாள் வேலையை 125 நாளாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
5 தேர்தல் வாக்குறுதிகள்
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் 150 நாளாக இந்த திட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பெண்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலை வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
மீன்பிடித் தடைக் காலத்திற்கான மீனவர்களுக்கான நிதி உயர்த்தி வழங்கப்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மீனவர்களுக்கு வீடு கட்டி தரப்படும்.
கொரோனா காலத்தில் மக்களை காத்தது அதிமுகதான். வருமானம் இல்லாத நிலையில் கூட நிதி நெருக்கடி இல்லாமல் இருந்தது. ஆனால் திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.
அதிமுக கொடுத்த கோரிக்கையின்படி 100 நாள் வேலையை 125 நாளாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு பொங்கலுக்கு பரிசுத்தொகையாக ரூ.5,000 வழங்க வேண்டும்" என பேசியுள்ளார்.