முதல்வர் மு.க. ஸ்டாலின் அ.தி.மு.கவை முடக்கப்பார்க்கிறார் - எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் மட்டுமின்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ், என்னை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குவதாக ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மாறி மாறி அறிவித்துக்கொள்வது அதிமுக கட்சியினரிடையே குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதல்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள கதவுகள் உடைக்கப்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி ஆவேசம்
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "நம்முடைய இயக்கத்தைச் சேர்ந்த சிலர் செய்த சதியால்தான் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் அ.தி.மு.கவை முடக்கப்பார்க்கிறார். துரோகிகளோடு சேர்ந்துகொண்டு, இந்த அரசு எம்.ஜி.ஆர். பெயரில் உள்ள மாளிகையை 'சீல்' வைத்திருக்கிறது" என்று கண்டனத்தை தெரிவித்துள்ளார்.