உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டலிலும் கேமரா வச்சு நாடகம் - இபிஎஸ் தாக்கு!
உடல்நிலை சரியில்லாம ஸ்டாலின் மருத்துவமனையில் நாடகம் நடத்துவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஊசலாடும் திமுக
சிவகங்கை, காரைக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மகளிருக்கு 1000 ரூபாய் தந்துவிட்டதாக கூறுகின்றனர்.
எப்ப கொடுத்தீங்க? சட்டமன்றத்தில் அழுத்தம் கொடுத்தோம், எங்கள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர் அழுத்தம் கொடுத்த பிறகு, 28 மாதங்களுக்கு பின் கொடுத்தார்கள். இப்போது நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு, விதிகளை தளர்த்தி ரூ.1000 தருவதாக சொல்கிறார்கள்.
தேர்தலில் மகளிர் வாக்குகளை பெறுவதற்காக இதை செய்கிறார். ஏன் இதை முன்பே கொடுத்திருக்கலாமே? இன்றைக்கு மாநகராட்சி, நகராட்சி நிர்வாக வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள எல்லா ஊழல்களையும், அதிமுக ஆட்சியில் விசாரித்து, தண்டனை பெற்றுத் தருவோம்.
2021 தேர்தலில் 525 அறிவிப்புகளை தந்தது திமுக. அதில் 10% தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில சேர்த்தா, வெண்டிலேட்டர் வைப்பாங்க. உயிர் ஊசலாடிட்டு இருக்கும்.
இபிஎஸ் விமர்சனம்
அதுபோல வெண்டிலேட்டர் உதவியுடன் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது திமுக அரசு. 2026ல் மக்கள் இந்த ஆட்சிக்கு முடிவு எழுதுவார்கள். உடல்நிலை சரியில்லாம ஸ்டாலின் மருத்துவமனையில இருந்ததால, உடல்நிலை சரியாக வாழ்த்தினேன். ஆனா அங்கயும் கேமரா வெச்சு, அதிகாரிகளை கூட்டி டிராமா நடத்துறாரு.
18 நாட்கள் அமெரிக்கா போனீங்களே, அப்ப மக்களை பற்றி சிந்திக்காம சைக்கிள் தான ஓட்டுனீங்க? கடைகளுக்கு 150% வரி உயர்த்தியுள்ளனர். வீடுகளுக்கு 100% வரி உயர்த்தியுள்ளனர். குப்பைக்கு கூட வரி போட்டுள்ளார்கள். மின்சார கட்டணம் 67% உயர்த்தப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் எவ்வளவு கட்டினோம், இப்போது எவ்வளவு கட்டுகிறோம் என விவாதிக்கலாமா? கிராமப்புற மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? எல்லா கடைகளிலும் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டுமாம். சின்ன கடைகளில் கூட பொறுத்தச் சொல்கிறார்கள். அந்த கேமராவின் விலை அளவுக்கு தான் கடையின் வருமானமே இருக்கும்.
சிசிடிவி கேமரா எப்படி வாங்குவார்கள்? இப்போது கிராமங்களில் தோப்பில் வீடு கட்டினால், அனுமதி வாங்க வேண்டும், அனுமதி வாங்காவிட்டால் வீட்டை சீல் வைப்போம் என்கிறார்கள். இனி டீக்கடை வைத்தால் கூட லைசன்ஸ் வாங்க வேண்டும் என செய்தி வந்துள்ளது. உங்களுக்கு எவ்வளவு கப்பம் கட்டுவாங்க! என கேள்வி எழுப்பியுள்ளார்.