போலீசாரையும்,அதிகாரிகளையும் திமுகவினர் மிரட்டுகின்றனர் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுகவினர் போலீசாரையும், அரசு அதிகாரிகளையும் மிரட்டும் அராஜக போக்கை நிறுத்த வேண்டும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆளும் தி.மு.க., அரசு பதவியேற்ற 3 மாதத்தில் ஊழல், கலெக்சன் மற்றும் பழிவாங்குதல் என்ற குறிக்கோளுடன், அரசு அதிகாரிகளையும், போலீசாரையும் மிரட்டி வரும் திமுகவினர் தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்கள் என ஆளுநரிடம் அதிமுக சார்பில் மனு அளித்தோம்.
அதன் பின்னராவது, திமுக அரசின் அராஜக போக்கு குறையும் என எதிர்பார்த்தோம்.ஆனால், அது மேலும் பெருகி நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், திமுகவினர் அரசு அதிகாரிகளை மிரட்டியும், போலீசாரின் உதவியுடனும் நடத்திய ஜனநாயக படுகொலையை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
எனவே, உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வினர் நடத்திய ஜனநாயக படுகொலையை ஆதாரங்களுடன் விளக்கியும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளுநரிடம் மீண்டும் நேரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இனியாவது, திமுகவினர் போலீசாரையும், அரசு அதிகாரிகளையும் மிரட்டும் அராஜக போக்கை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.