திமுகவினர் மக்களையே சாப்பிட்டுவிடுவார்கள் - முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்திற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தார், “திமுகவுக்கு இந்த தேர்தலோடு மூடுவிழா தான். திமுக தலைவர் ஸ்டாலின் பலரையும் தரக்குறைவாக பேசினார். நான் உழைத்து தான் தற்போது இந்த இடத்தில் இருக்கிறேன். ஸ்டாலின் எங்கு சென்று உழைத்தார். அவரின் தந்தை கருணாநிதி முதல்வராக இருந்தார், திமுக தலைவராக இருந்தார் அதனால் இவரும் திமுக தலைவராக இருந்தார்.
கருணாநிதி உடல்நலக் குறைவால் இருந்தபோதும் திமுக தலைவர் பொறுப்பை ஸ்டாலினிடம் கொடுக்கவில்லை. செயல் தலைவர் பொறுப்பை தான் கொடுத்தார். ஸ்டாலின் மீது கருணாநிதிக்கே நம்பிக்கை இல்லை. பின்னர் மக்கள் எப்படி நம்புவார்கள்.
திமுகவினர் பத்து வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இல்லை. கோரப்பசியில் இருக்கிறார்கள். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களையே சாப்பிட்டுவிடுவார்கள்” என்றார்.