"அதிமுகவை கைப்பற்ற சதி" முதல்வர் எடப்பாடி பழனிசாமி பகிரங்க குற்றச்சாட்டு
தமிழகத்தில் அதிமுகவை கைப்பற்ற சில பேர் சதி செய்து வருவதாகவும், எனவே, ஒவ்வொரு தொண்டனும், எச்சரிக்கை உணர்வோடு அதிமுகவை கட்டிக்காக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதற்காக அவருக்கு சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அந்த வாகனத்தில் அவர் தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளார்.இதனையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் இது.
எனவே, அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றும் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்றும் சிலர் சதி செய்து வருகின்றனர்.
எனவே, ஒவ்வொரு தொண்டனும், எச்சரிக்கை உணர்வோடு அதிமுகவை கட்டிக்காக்க முன்வரவேண்டும். 2017-ம் ஆண்டு நான் முதல்வராக பொறுப்பேற்ற போது, 18 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்டு இந்த ஆட்சியைக் கலைக்க முயன்றனர். கட்சியை உடைக்கவும் முயற்சி செய்தனர். அதனை ஒற்றுமையாக இருந்து முறியடித்தோம்.