பேருந்தில் சீட் பிடிப்பதில் தகராறு - 9ஆம் வகுப்பு மாணவர் கொலை
பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
9ஆம் வகுப்பு மாணவர்
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்து பூலாம்பட்டி ரோடு பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கந்தகுரு(14), 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவர் தினமும் பள்ளியின் வாகனத்தில் பயணம் செய்வது வழக்கம். நேற்று(10.02.2025) மாலை பள்ளி முடிந்ததும் வழக்கம் போல் பள்ளி வாகனத்தில் எறியுள்ளார். அப்போது சீட் பிடிப்பதில் கந்தகுருவிற்கும் சக மாணவர்களிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு
இதில் கந்தகுருவின் நெஞ்சு மற்றும் கழுத்து பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கந்தகுரு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மாணவரின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதம் நடத்தி வருகிறார்கள்.
கந்தகுருவை தாக்கிய மாணவர்கள் யார் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி வாகனத்தில் இருந்த பொறுப்பாளர்கள், டிரைவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.