யார் அந்த பவர்சென்டர்? கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி
பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ.2 கோடி மதிப்பிற்கு தனியாருக்கு மாற்றப்பட்டிருப்பது என்பது ஏதோ Clerical Error போல இந்த பொய்க்கால் குதிரை அரசு கடக்க முயல்வது ஏற்புடையதல்ல. தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால் இது மிகப்பெரிய ஊழல்!

இந்த பத்திரப்பதிவு குறித்த விவரங்கள் ஏன் பொதுவெளியில் வரவில்லை? யார் பெயரில் இந்த நிலம் மாற்றப்பட்டது? அந்த நபர் இந்த வழக்கில் குற்றவாளி இல்லையா? இவ்வளவு பெரிய ஊழல், அதுவும் பழனி முருகப்பெருமானின் சொத்தையே வளைத்து போடும் நோக்கத்தில் நடந்திருக்கிறது.
இவ்வளவு பெரிய பத்திரப்பதிவு நடக்கிறது என்பதால், அதை ஏதோ ஒரு பவர்சென்டர் தான் முன்னின்று இதற்கான உத்தரவுகளை கொடுத்திருக்க வேண்டும்.
தனது ஆட்சியில் தான் மட்டுமே பவர்சென்டர் என்ற சொன்ன முதல்வர் விஜய் அவர்களே, இந்த ஊழலில் பின்னால் யார் அந்த பவர்சென்டர் அதுவும் முதலில் ஒரு சார்பதிவாளர் இதனை பதிவு செய்ய இயலாது என மறுத்த நிலையில் அவர் மாற்றப்பட்டு, வேறு ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு இந்த பத்திரப்பதிவு நடைபெற்றது என்றால், இந்த பத்திரப்பதிவிற்காக தான் புதிய அதிகாரியே வந்தாரா?

அந்த அளவிற்கு அதிகாரியையே மாற்றி காரியத்தை முடிக்கும் அளவிற்கு யார் அந்த பவர்சென்டர்? இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலை தராது.
நேர்மையான விசாரணை நடைபெற பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.