டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இறப்பு தற்கொலையா? இல்லை வேறேதும் காரணமா? என்பதை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சாமி தரிசனம்
அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த அவர் செய்யதியாளர்களை சந்தித்து பேசினார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
அப்போது பேசிய அவர் "கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அவர் ஒரு நேர்மையான திறமையான அதிகாரி.
அவர் ஏற்கனவே மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பணி கொடுத்து மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கிய காரணத்தினால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
அதிமுக ஆட்சியில் ஒன்றரை லட்சம் காவலர்களுக்கு மன அழுத்தத்தில் இருக்கும்போது ஓய்வு கொடுத்து நிம்ஹான்ஸ் மருத்துவமனையோடு இணைந்து "காவல்துறை நல்வாழ்வுத் திட்டம்" மூலமாக மன அழுத்தத்திலிருந்து விடுபட சிகிச்சையும் கொடுத்து வந்தோம். ஆனால் இப்போதைய ஆட்சியாளர்கள் அந்த திட்டத்தை நிறுத்தி விட்டனர்.
இந்த திட்டம் நீடிக்கப்பட்டிருந்தால் காவல் அதிகாரிகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும், டிஐஜி விஜயகுமார் இறப்பு தற்கொலையா? இல்லை வேறேதும் காரணமா என்பதை கண்டறிய தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.