100 கோடி சொத்துக்கள் முடக்கம் - அதிர்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

ADMK O. Panneerselvam Enforcement Directorate
By Karthikraja Jan 15, 2025 04:08 PM GMT
Report

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் 100 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

வைத்திலிங்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தற்போது ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணியான அதிமுக உரிமை மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 

வைத்திலிங்கம்

இவர் கடந்த 2011 - 2016 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் வீட்டு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.

லஞ்ச வழக்கு

அப்போது சென்னை பெருங்குளத்தூரில், 58 ஏக்கர் பரப்பளவில் ‘ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர்’ என்ற நிறுவனம் 24 பிளாட்டுகளாக 1400 க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட குடியிருப்புகள் கட்ட விண்ணப்பித்தது. அதற்கான திட்ட அனுமதி வழங்க அப்போது அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

ed raid on vaithilingam house

இது தொடர்பாக வைத்தியலிங்கம், அவரது 2 மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக 1058 சதவீதத்திற்கும் அதிகமாக 33 கோடி சொத்து சேர்த்ததாகவும் வைத்தியலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

சொத்துக்கள் முடக்கம்

இது தொடர்பாக அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சட்டவிரோதமாக பணப்பரிவர்தனைகள் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை சார்பில் மற்றொரு வழக்கு பதியப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் அவரது வீடு மற்றும் அலுவலகம் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றியது. இந்நிலையில் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான சுமார் 100.92 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்களை முடக்குவதாக அமலாக்கத்துறை இன்று(15.01.2024) அறிவித்துள்ளது. 

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டு பாஜகவுடன் நெருக்கமாக இருந்து வந்தார். இந்நிலையில் அவரது வலது கரமாக விளங்கும் வைத்திலிங்கம் மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை தமிழக அரசியல் பேசு பொருளாகியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பாஜக எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.