இலங்கையில் மீண்டும் அவசர நிலை அமல் - போராட்டத்தால் ராஜபக்ச அதிரடி
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி தங்களது எதிர்ப்பை போராட்டத்தின் மூலம் காட்டி வருகின்றனர்.
இலங்கை பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்கா, சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றில் இருந்து உதவி பெற முயன்று வருகிறது. இந்தியா சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இலங்கையில் இந்த நிலைக்கு ராஜபக்ச அரசே காரணம் என்று அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதனால் அரசு பதவிகளில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் அங்குள்ள மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று மாலை அந்நாட்டு நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது சிலர் நாடாளுமன்றத்தில் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டு அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. அங்கு நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.