பாமக யாருக்கு சொந்தம்? - மீண்டும் உறுதிப்படுத்திய தேர்தல் ஆணையம்
ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தான் என நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாமக தலைவர் யார்?
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது அன்புமணி ராமதாஸ் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கட்சி, இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாமகவுக்கு நான் தான் தலைவர், தங்களுடைய தரப்புக்கு கட்சியின் சின்னமான 'மாம்பழம்' ஒதுக்க வேண்டும் என, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், பாமக நிர்வாகிகள் அன்புமணியை தான் தலைவராக தேர்வு செய்துள்ளதற்கான தரவுகள் உள்ளன. 2026 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் திகதி வரை அன்புமணி தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று தெரிவித்தது.
அன்புமணி தரப்பு போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சம்பர்ப்பித்துள்ளது, தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்ய வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாமக அங்கீகாரம் பெற்ற கட்சி இல்லை என்பதால் தேர்தல் பாமக விவகாரத்தில் ஆணையம் தலையிட முடியாது இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடலாம் எனத் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறு ஆய்வு மனுவில், எங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தான். இதை ஏற்க மறுக்கும் தரப்பினர் சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று வந்தால் மட்டும் தான் மாற்றங்களை செய்ய முடியும் என தெரிவித்தது.
மேலும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் உட்கட்சி பிரச்னை எழுவதற்கு முன்பு, தரப்படும் ஆவணங்களின் அடிப்படையில் அதனை அங்கீகரிக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது டெல்லி உயர்நீதிமன்றம் மறுஆய்வு மனுவை முடித்து வைத்தது.