ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் - முழு விவரம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார்.
இதனையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியாக காலியாக உள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. மேலும், டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், முன்னதாகவே அதற்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்
இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைதேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கும் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு மீதான பரிசீலனை ஜனவரி 18 ஆம் தேதி என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 ஆம் தேதி தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல்
இதே போல் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுள்ளதால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியிலும், டெல்லி மாநிலத்திலும் தேர்தல் விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.