வாக்கு என்னும் மையத்தில் முறைகேடு நடப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும்: ஆவடி தி.மு.க வேட்பாளர் நாசர்

Tamil Nadu Election Vote Counting Election commission
By mohanelango Apr 15, 2021 09:47 AM GMT
Report

ஆவடி தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை எதிர்த்து தி.மு.க. சார்பில் நாசர் போட்டியிட்டார்.

இந்நிலையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ”திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளடக்கிய 10 தொகுதிகளுக்கான வாக்குகள் வேப்பம்பட்டில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் வைத்து எண்ணப்படுகிறது.

குறைவான வாக்காளர்கள் மற்றும் குறைவான வாக்குச்சாவடிகளை கொண்ட மாதவரம் பகுதியில் ஒரு இடத்தில் மட்டுமே வைத்து வாக்குகள் எண்ணப்படுகிறது. ஆனால் மாதவரம் தொகுதியைவிட குறைவான வாக்காளர்களை கொண்ட ஆவடி தொகுதிக்கான வாக்குகள் 2 இடங்களில் வைத்து எண்ணப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டோம். தேர்தல் அதிகாரி அதை பரிசீலனை செய்வதாக எழுத்துப்பூர்வமாக எந்த உறுதியும் கொடுக்காமல் வாய்மொழியாக மட்டுமே உறுதியளித்தார். இதுபோல தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டுமே தபால் ஓட்டு உரிமை உள்ளது.

ஆனால் நடுகுத்தகை என்ற கிராமத்தில் உள்ள டீக்கடை நடத்திவரும் வெங்கடேஷ் என்பவரும், கோவில்பதாகை பகுதியிலுள்ள மளிகைக் கடைகாரர் ஒருவரும் தபால் வாக்களித்துள்ளனர். இவர்கள் எப்படி வாக்களித்தார்கள் என தெரியவில்லை. இது போன்று பல முறைகேடுகள் அவர் தொடர்ந்து நடந்து இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

மேலும் பலரை வாக்களிக்க விடாமல் அதிகாரிகள் தடுத்துள்ளனர். இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளோம். இது மாத்திரமல்ல கல்லூரி வளாகத்தில் அடிக்கடி இணையதள சேவை பழுது ஏற்பட்டுள்ளதாகவும் அதை சரி செய்வதற்காக தங்களை ஆசிரியர்கள் என்று கூறி அவ்வப்போது கும்பல் கும்பலாக சிலர் வருகின்றனர்.

இவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இது எங்களுக்கு மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அந்த அறைகளுக்கு வேட்பாளர்கள் செல்ல வேண்டும் என்றாலே கடுமையான 3 அடுக்கு பாதுகாப்பை மீறி செல்ல வேண்டி இருக்கும் போது இவர்கள் அவ்வப்போது சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றனர்.

இதன்மீது மாவட்ட தேர்தல் ஆணையம் மற்றும் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலையில் இரவு சுமார் 2 மணி அளவில் பெரிய வேன் ஒன்று வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் வந்தது.

இது குறித்து தி.மு.க. வினர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர்கள் அவசரகால கழிவறை என்று பதிலளித்தனர். அவசரகால கழிவறை எதற்காக இரவு நேரத்தில் வர வேண்டும். இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் நடுஇரவில் போராட்டமும் நடத்தினோம்.

இதுபோன்ற பல குளறுபடிகள் இருக்கின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளோம் இது போன்ற பிரச்சினைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் கட்சி தலைமைக்கு இதை கொண்டு சென்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகாரிகள் அனைவரும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இம்மாதிரியான நிகழ்வு நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைக்கூலியாக செயல்படுகிறது. தன்னிச்சையாக செயல்படும் துறைகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே செயல்படுவதால் இம்மாதிரியான தவறுகள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.