தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறில்லை - உயர்நீதிமன்றம் காட்டம்
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.
ஆனால் அன்று முழு பொது முடக்கம் என்பதால் கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரண்டாம் கட்ட கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம் என நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.
மேலும், “ தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது வேற்று கிரகத்தில் இருந்துள்ளீர்களா.. கொரோனா 2வது அலைக்கு தேர்தல் ஆணையமே காரணம் நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் காதில் வாங்கவில்லை.
கட்டுப்பாடுகள் இல்லாமல் தேர்தல் பிரச்சாரம், பேரணிகள் நடைபெற அனுமதித்ததே கொரோனா அதிகமாக பரவ காரணம். இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.
வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான திட்டத்தை ஏப்ரல் 30-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். எங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை எனில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிடுவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.