மீண்டும் பரவத் தொடங்கும் எபோலா: 70 பேர் தீவிர கண்காணிப்பில்

health human cell
By Jon Feb 08, 2021 01:33 PM GMT
Report

பல ஆயிரம் மக்களை பலிவாங்கிய எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியானதாக காங்கோ ஜனநாயக குடியரசின் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பிப்ரவரி 1 ஆம் திகதி பியானா நகரில் எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் அந்த பெண் கண்டுபிடிக்கப்பட்டு பிப்ரவரி 3 ஆம் திகதி புட்டெம்போவில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னர் எபோலா பாதிப்பில் இருந்து குணமடைந்த ஒருவரையே தற்போது எபோலா பாதிப்பால் மரணமடைந்துள்ள பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது எபோலாவால் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளது, மீண்டும் எபோலா பரவலுக்கான அறிகுறியா அல்லது கட்டுப்படுத்தக் கூடியதா என்பது தொடர்பில் தெளிவான தகவல் ஏதும் வெளிவரவில்லை. 2018 முதல் 2020 வரையான காலகட்டத்தில் இப்பகுதியில் எபோலா பரவல் காரணமாக சுமார் 2,200 மக்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.  

மீண்டும் பரவத் தொடங்கும் எபோலா: 70 பேர் தீவிர கண்காணிப்பில் | Ebola Virus Girl Dead

எபோலா தொற்று கண்டறியப்பட்ட பகுதியில் தற்போது பிராந்திய சுகாதார அமைப்புகள் துரித நடவடிக்கையில் களமிறங்கியுள்ளன. இவர்களுக்கு உதவியாக தேசிய சுகாதார அமைப்புகளும் கூடிய விரைவில் களமிறங்கும் என சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. எபோலாவால் மரணமடைந்த பெண்ணுடன் நெருக்கமானவர்கள் என இதுவரை 70 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும் அவர் சென்ற பகுதிகள் கண்டறியப்பட்டு கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் உலக சுகாதார நிறுவனமும் உதவிக்கு வந்துள்ளது. மட்டுமின்றி, மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காங்கோவின் பூமத்திய ரேகை காடுகள் எபோலா வைரஸின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கின்றன.

எபோலா பாதிப்பு கடுமையான வாந்தியெடுத்தல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது மற்றும் உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. 1976 ஆம் ஆண்டில் எபோலா ஆற்றின் அருகே வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து காங்கோ நாடு இதுவரை 11 முறை மிகப்பெரிய எபோலா பரவலை எதிர்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.