'முதல்ல ஜெயில் சாப்பாடு...அப்புறம் தான் வீட்டு சாப்பாடு’ - முன்னாள் அமைச்சருக்கு நீதிபதி உத்தரவு
ஊழல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் வீட்டு உணவு கேட்டு அனுமதி கோரிய நிலையில் அவரை ஜெயில் சாப்பாட்டை முதலில் சாப்பிடுங்கள் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அனில் தேஷ்முக் இருந்தார். இவர் அமைச்சராக இருந்தபோது மும்பை நகர காவல் ஆணையராக இருந்த பரம் பீர் சிங், அனில் தேஷ்முக் மும்பை மதுபானக்கூடங்கள், ரெஸ்டாரண்ட்களை மிரட்டி அவர்களிடம் இருந்து மாதம் 100 கோடி ரூபாய் பணம் வசூல் செய்து தர வேண்டும் என தன்னை நிர்பந்திப்பதாக பகீர் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அமைச்சர் பதவியை இழந்த அனில்தேஷ்முக் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறையினர் கடந்த நவம்பர் 1ம் தேதி அனில் தேஷ்முக்கிடம் 12 மணிநேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக அன்றைய தினம் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ அமைப்பும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
இதனிடையே முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தனக்கு வீட்டு உணவு வழங்க வேண்டும் என அவர் தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி முதலில் சிறை உணவை சாப்பிடுங்கள்... அது சரியில்லை என்றால் வீட்டு உணவுக்கு அனுமதி வழங்குகிறேன் என அறிவுறுத்தினார். மேலும் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறையில் அவருக்கு படுக்கை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.