துருக்கியை தொடர்ந்து இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் - எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்..!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதை 3 நாட்களுக்கு முன்பே கணித்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் இந்தியாவிலும் இதே போன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
துருக்கில் உள்ள காசியான்டெப் நகரத்தில் அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
காசியாடெப் என்ற நகரம் துருக்கின் தென் கிழக்கிலும், சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.
இதை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியா நாட்டில் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
7 ஆயிரத்தை கடந்த உயிரிழப்புகள்
இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போது வெளியான தகவலின் படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 5 ஆயிரத்து 894 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் ஆயிரத்து 832 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 726 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் 42 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்
இந்த நிலையில் நெதர்லாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கி பகுதியில் ஏற்படும் என்று துல்லியமாக கணித்து உள்ளார்.
SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவர் ட்விட்டரில் வெளியிட்ட சமூக வலைதளங்களில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அவரின் அந்த பதிவில் கூடிய விரைவிலோ அல்லது தாமதமாகவோ மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும் என்று பதிவிட்டு இருந்தார்.
இதை அப்போது பலர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இந்த நிலையில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் ட்விட்டரில் மீண்டும் ப்ரான்க் ஹூகர்பீட்ஸ் பதிவிட்டு இருக்கிறார்.
மத்திய துருக்கியில் பாதிக்கப்பட்டவர்களுடன் என் இதயம் இருக்கிறது. 115 மற்றும் 526 ஆவது ஆண்டுகளை போல் இப்பகுதியில் இது போன்ற நிலநடுக்கம் ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொன்னேன் என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவை தாக்கும் என எச்சரிக்கை
இதையடுத்து ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் அடுத்தடுத்து புவியியல் சூழல் குறித்து வெளியிடும் கருத்துக்கள் உற்று நோக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்தியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு பெரும் அளவிலான நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக வந்து இந்திய பெருங்கடலில் முடிவடையும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.ஆனால் எப்போது ஏற்படும் என்று அவர் குறிப்பிடவில்லை.