நிலநடுக்கத்தால் நிற்கதியான குழந்தைகள் - கண்ணீர் கடலில் தத்தளிக்கும் துருக்கி, மற்றும் சிரியா
எங்கும் திரும்பினாலும் மரண ஓலங்கள், இடிப்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் குழந்தைகள் இப்படி பல இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது இந்த கோர நிலநடுக்கம்.
தொடர்ந்து 3 முறை நிலநடுக்கம்
துருக்கி நாட்டில் உள்ள காசியான்டெப் நகரில் இருந்து 33 கிமீ தொலைவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வீடுகள் மற்றும் உயரமான வணிக வளாகங்கள் அடுத்தடுத்து கண் இமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்து தரைமட்டமாகின. இதனால் நகரமே நொடிப்பொழுதில் உருகுலைந்தது.
இதே போன்று சிரியா நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது இதை தொடர்ந்து ரிக்டர் அளவில் 7.6 மற்றும் 6.0 என்ற 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் புகை மண்டலங்களாக காட்சியளித்தது. தரைமட்டமான கான்கீரிட் கட்டங்களின் மத்தியில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர்.
நெஞ்சை ரணமாக்கும் கோர காட்சிகள்
கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள பலரையும் அவர்களது உறவினர்கள் கண்ணீருடன் தேடி அலைந்து வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மோப்ப நாய் உதவியுடன் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
வீடுகளை இழந்து நிர்கதியாக வீதிகளில் கடும் குளிரில் தஞ்சம் அடைந்துள்ளனர். குடிநீர் கூட இன்றி பல இன்னலுக்கு அந்நாட்டு மக்கள் ஆளாகியுள்ளனர்.
கட்டிட இடுபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருவோர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் கயிறு கட்டி கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் கட்டிட இடுபாடுகளில் அதிகளவு சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
கட்டிட இடுபாடுகளில் சிக்கியுள்ளவர்கள் உயிருக்கு போராடி வரும் நிலையில் அவர்களை மீட்க அந்நாட்டு மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.
இந்த கோர நிலநடுக்கத்தால் பெற்றோர் குழந்தைகளையும், குழந்தைகள் பெற்றோரையும் இழந்து நின்று அவர்கள் எங்காவது உயிர் பிழைத்திருக்க மாட்டார்களா என தேடி அலைகின்றனர். இடிப்பாடுகளில் சிக்கி மீட்கப்படும் குழந்தைகளின் கதறல்கள் கல் நெஞ்சையும் ரணமாக்கிறது.
உதவிக்கரம் நீட்டும் நாடுகள்
கோர நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களுக்கு இந்தியா, ஜெர்மனி, ஈராக் உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் இன்று துருக்கி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மரண ஓலங்கள் அடங்கும் முன் மீண்டும் அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டால் மக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
இடிப்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வரும் அனைவரும் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று ஐபிசி தமிழ்நாடு குழுமம் இறைவனை பிராத்திக்கிறது.