இனி... பேருந்து பயணத்தில் இயர்போன் இல்லாமல் பாடல்கள் கேட்கத் தடை - போக்குவரத்துக் கழகம் பரிந்துரை
பேருந்து பயணம் செய்யும்போது, இயர்போன் இல்லாமல் பாடல்கள் கேட்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பேருந்து பயணம்
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் இயர்போன் இல்லாமல் சத்தமாக பாடல்கள் கேட்டுக்கொண்டும், படம் பார்த்துக் கொண்டும், கேம் விளையாடிக்கொண்டும் செல்கிறார்கள்.
இதனால், சக பயணிகளுக்கு இந்தச் செயல் பெரும் தொந்தரவாக அமையும். இது சம்பந்தமாக பல பயணிகளுக்குள் சண்டையும் வந்துள்ளது. நடத்துனர்களுக்கும், பேருந்து ஓட்டுநர்களுக்கும் பயணிகள் புகார்களும் தெரிவித்து வருவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், பேருந்துகளில் இயர்போன் பயன்படுத்தாமல் பாடல்கள் கேட்பதற்கு, பேசுவதற்கு மற்றும் வீடியோ கேம் விளையாட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
பரிந்துரை
திருப்பூரைச் சேர்ந்த கே.எல் பொன்னுச்சாமி என்பவர் இது தொடர்பாக தமிழக அரசு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியிருந்தார். இவர் அனுப்பிய மனு மீது தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு, சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அனுப்பியுள்ள பரிந்துரை கடிதத்தில், பேருந்துகளில் பாடல் கேட்பது, சத்தமாக செல்போனில் பேசுவது, வீடியோ கேம் விளையாடுவது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.