‘இது கொரோனா 3வது அலைக்கான அறிகுறி’ - ஐசிஎம்ஆர் மருத்துவர் எச்சரிக்கை
கொரோனா 3வது அலைக்கான அறிகுறி சில மாநிலங்களில் தெரிய தொடங்கி உள்ளதாக ஐசிஎம்ஆர் மருத்துவர் டாக்டர் சாமிரான் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மே மாதம் முதல் ஜூலை வரை உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்புகள் மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் கட்டுக்குள் வந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளதோ என்ற எண்ணம் அனைவரிடத்திலும் எழத்தொடங்கியுள்ளது. இதனிடையே ஐசிஎம்ஆர் மருத்துவர் டாக்டர் சாமிரான் பாண்டா அளித்த பேட்டி ஒன்றில், கொரோனா 3ஆம் அலைக்கான அறிகுறிகள் சில மாநிலங்களில் தெரிய தொடங்கி உள்ளது.
மேலும் விழா காலங்கள், பண்டிகைகள் காரணமாக கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேசமயம் 2ஆம் அலையோடு ஒப்பிட்டால் மூன்றாம் அலை பாதிப்பு குறைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் 2ஆம் அலையில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள் மூன்றாம் அலையில் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.