முன்பு 8 புருஷன்கள்..தற்போது 2 மாப்பிள்ளைகள் வெயிட்டிங்..பல லட்சங்கள் அபேஸ் - சிக்கிய கில்லாடி லேடி
முன்பு 8 இளைஞர்களை திருமணம் செய்து பல லட்சங்களை அபேஸ் செய்த பெண் காவல்துறையினரிடம் வசமாக சிக்கினார்.
ஏமாற்றிய கில்லாடி லேடி
கரூர் மாவட்டம் ஆதிவிநாயகர் கோவில் சந்து பகுதியில் வசித்து வந்த சௌமியா என்ற சபரி தனது கணவரை விட்டு பிரிந்து காந்திகிராமம் பகுதியில் வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், மறுமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அக்கம் பக்கத்தினருடன் தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய பக்கத்து வீட்டு பெண் ஒருவர் தனது உறவினரான ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமாருக்கு சௌமியாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
தான் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவதாக கூறியும், தனக்கு அமைச்சரை தெரியும் என்று சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் மூலம் சிவக்குமாருக்கு வேலை வாங்கி தருவதாக கூறியும் முன்பணமாக ரூ.10,000 கேட்டுள்ளார்.
இதை நம்பிய அவரின் குடும்பத்தினர் சௌமியாவிடம் முன்பணமாக ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளனர்.
மேலும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் என 20 நபர்களுக்கு அரசு வேலை பெறுவதற்காக முன்பணமாக ரூ.10 லட்சம் வரை கொடுத்துள்ளனர்.
இதனிடையே கரூர் மாவட்டத்திற்கு வந்த சிவகுமாரை அழைத்துச் சென்று தமது தாயாரின் வீடு என்று பெரிய பங்களாவைக் காட்டியுள்ளார்.
தாம் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும் கூறி நாடகமாடியுள்ளார் சௌமியா.
விசாரணையில் அம்பலம்
சௌமியாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சிவக்குமார் கரூரில் உள்ள தனது உறவினர் ஒருவருக்கு சௌமியா போட்டோவை அனுப்பி விசாரிக்குமாறு கேட்டுள்ளார்.
அதை அடுத்து சௌமியாவின் பெற்றோரிடம் விசாரித்ததில் தங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிவக்குமாரிடம் சௌமியா காட்டிய பெரிய பங்களாவும் அவருக்கு சொந்தமில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த உறவினர் சிவக்குமாரிடம் சௌமியா அளித்த தகவல் அனைத்தும் பொய்யானது எனக் கூறி எச்சரிக்கை செய்துள்ளார்.
கரூரில் வீட்டு உரிமையாளரை சிவக்குமார் சந்தித்த போது அவரும் ரூ.15 லட்சம் கொடுத்து ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் சௌமியாவை குண்டுகட்டாக துாக்கி பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் சௌமியாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்பு 8 திருமணங்கள் செய்த நிலையில் தற்போது 2 மாப்பிள்ளைகள் வெயிட்டிங்கிள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.