தமிழகத்தில் அமலுக்கு வந்த இ-பதிவு முறை: போலிஸார் தீவிர சோதனை

Corona Lockdown E registration
By mohanelango May 18, 2021 07:15 AM GMT
Report

மாவட்ட எல்லையை கடப்பதற்கு இ பாஸ் அவசியம். இ பாஸ் இல்லாத காரணத்தால் ஏராளமான வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி.

இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டதால் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

இதனிடையே மாவட்டங்களுக்குள் உள்ளேயும், மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இ-பதிவு முறை செய்த பிறகே செல்ல வேண்டும் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாவட்ட எல்லைப்பகுதியான பெருநகர், தாமல், செவிலிமேடு, செட்டிபேடு , மணிமங்கலம், உள்ளாவூர், வடக்கு பட்டு, பொன்னியம்மன்பட்டரை ஆகிய 18 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதாவது திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவு முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் அமலுக்கு வந்த இ-பதிவு முறை: போலிஸார் தீவிர சோதனை | E Registration Police Checking Vehicle Travelling

எனவே நேற்று காலை 6 மணி முதல் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் காஞ்சிபுரத்திற்கு யார்? யார்? வருகிறார்கள் என்பதை கண்காணித்தனர். மேலும் அவர்களது முகவரிகளை போலீசார் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

அப்போது கார்களில் வந்தவர்களை போலீசார் நிறுத்தி இ-பதிவு முறை பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதற்கான ஆவணங்களை காண்பித்த பிறகே அவர்களை மாவட்டத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

அதேசமயம் இ-பதிவு செய்யாமல் வந்த பல வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர். காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட எல்லையான செட்டி பேடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை நிறுத்தி இ-பதிவு உள்ளதா? என சோதனை மேற்கொண்டனர். இ-பதிவு அமல்படுத்தப்பட்ட முதல் நாளான நேற்று பலர் பதிவு பெற முடியாததால் இ-பதிவு இல்லாமலேயே வாகனத்தில் வந்தனர்.

இதனால் போலீசார் அவர்களை இனி இ-பதிவு இல்லாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும், என எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர்.