“மீண்டும் இ - பதிவு கட்டாயம்” - புதிய வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டது இந்திய விமான நிலைய ஆணையம்

india omicron threat new protocols e pass mandatory
By Thahir Dec 17, 2021 05:40 AM GMT
Report

சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு வரும் பிற மாநில பயணிகளுக்கு இ-பாஸ் அவசியம் என புதிய நெறிமுறை வெளியீடு.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்திய விமான நிலைய ஆணையம் அனைத்து விமான நிலையங்களுக்கும் பல்வேறு புதிய வழிகாட்டு நெறி முறையை வெளியிட்டு உள்ளது.

இதுவரை பன்னாட்டு விமான நிலையங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்து வந்தநிலையில் தற்போது உள்நாட்டு விமான பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகளை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி உள்நாட்டு பயணிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனா் பரிசோதனை, இ- பதிவு கட்டாயம் என தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் கோவை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை இந்திய விமான நிலைய ஆணையம் விதித்துள்ளது.

இதற்கான புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் மாநிலம் வாரியாக வெளியிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் விவரம்,

கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லா சான்றிதழ் அவசியம் வைத்திருக்க வேண்டும்.

பிற மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகள் இ - பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பன்னாட்டு பயணியரை பொறுத்தவரை மத்திய அரசின் கொரோனா வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும்.

இதே போல ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான மேலும் விபரங்களை இந்திய விமான நிலையங்களின் ஆணைய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.