சென்னையில் மீண்டும் தீப்பிடித்த மின்சார இருசக்கர வாகனம் - கேள்விக்குறியாகும் மத்திய அரசின் கனவு
இந்தியாவில் அடுத்தடுத்து மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியும் சம்பவம் பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் நிலவும் எரிபொருள் விலை ஏற்றம், காற்று மாசுபாடு ஆகியவற்றை குறைக்கும் நோக்கமாக மத்திய அரசு இ-பைக் எனப்படும் மின்சாதன வாகனங்களை பயன்படுத்துமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மக்களும் இதனை பெறும் வகையில் அவற்றின் விலையை குறைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் இ-பைக் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தந்தை, மகள் என இருவரும் மூச்சுத்திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் புனேவில் ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ பைக் சாலையில் நின்று கொண்டு இருந்த போது திடீரென பைக் தீப்பிடித்தது. இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில் விபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து விரைவில் முடிவுகளை அறிவிப்போம் என்றும் ஓலா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாதவரம் அருகே பேட்டரி மோட்டார் பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூரைச் சேர்ந்தவர் கணேஷ் என்ற இளைஞர் திருவொற்றியூரில் உள்ள டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்போல் இ பைக்கில் வேலைக்குப் புறப்பட்டு மாதவரம் 200 அடிச் சாலை மஞ்சம்பாக்கம் கொசப்பூர் அருகே வரும்போது பைக் இன்ஜினில் இருந்து லேசாகப் புகை வந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணேஷ் சுதாரித்து பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு சிறிது தொலைவில் சென்று நின்றுள்ளார். அடுத்த சில நொடிகளில் பைக் தீப்பிடித்து எரிந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் அந்த வழியாகச் சென்ற குடிநீர் லாரியை நிறுத்தி அதில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்படுத்தினர். ஆனால் அதற்குள்ள இ பைக் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்தது. இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இப்படி அடுத்தடுத்து இ-பைக்குகள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளதோடு மத்திய அரசின் கனவையும் சிதைக்க தொடங்கியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.