14 மணி நேரம்... 26 இடங்களில் சோதனை... வசமாக சிக்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , அவரது தம்பி மற்றும் உதவியாளர்கள் வீடுகள் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனை 14 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது சகோதரர் சேகர் ஆகியோர் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் தான், அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளார். இது தொடர்பாக இன்று கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கரூரில் உள்ள விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் , அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் , அவருக்கு நெருங்கி தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் மொத்தம் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 14 மணி நேர சோதனையில் ரூ.25.56 லட்சம் பணம் மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் , காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன .
இதில் கரூரில் உள்ள அமைச்சரின் தம்பி சேகர் வீட்டில் மட்டும் ரூ. 16 லட்சமும், சென்னை மற்றும் பிற இடங்களில் 96000 கைப்பற்றப்பட்டுள்ளது.
கரூரில் 14 மணி நேரம் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நிறைவு பெற்றது. இதனால் அதிமுக வட்டாரம் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரமே பரபரப்புக்குள்ளானது.