ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திமுக தேர்தல் பிரச்சாரப் பாடலை துரைமுருகன் வெளியிட்டார்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை ஒட்டி, திமுகவின் தேர்தல் பிரச்சாரப் பாடலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட பெரிய திரைகளில் பிரச்சாரப் பாடல் ஒலித்தது. அந்த பாடலை கேட்டு, தொண்டர்கள் உற்சாகக் குரல் எழுப்பினார்கள். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடந்த விழாவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.
இது குறித்து ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது - "மார்ச் 1 - என்னுடைய பிறந்தநாள். அன்று பிறந்தநாள் கொண்டாட்டமாக இருக்க வேண்டியதில்லை; அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். மக்களின் நன்றிப் புன்னகையே மிகப்பெரிய வாழ்த்து! வாருங்கள்! நாம் அனைவரும் சேர்ந்து நமக்கான வளமான தமிழகத்தை அமைப்போம்" என்று அந்த குறிப்பில் கூறியிருக்கிறார்.
இன்று காலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதேபோல் தந்தை பெரியார் நினைவிடத்திலும் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். ஏற்கெனவே, திமுகவின் தேர்தல் பிரச்சாரப் பாடலான 'ஸ்டாலின்தான் வாராரு, விடியல் தரப்போறாரு' என்ற பாடலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கான பணிகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து தரப்பினருக்கும் இப்பாடல் வரிகளை கொண்டு சேர்க்கும் வகையில் பாடல் வரிகளை 'மொபைல் ரிங்டோன்' ஆக மாற்றப்பட்டு, அதனை முன்னணி அலைபேசி நிறுவனங்களின் மூலம் காலர் டியூனாக பெறும் வகையில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, திமுக தேர்தல் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, விசிக தலைவர் தொ.திருமாவளவன் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நீண்ட பிறந்தநாள் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி பகிர்ந்திருக்கிறார்.