கருணாநிதியை மிஞ்சிய மு.க.ஸ்டாலின் - புகழ்ந்து தள்ளிய துரைமுருகன்
கலைஞர் கருணாநிதியின் புகழை ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்,திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என இம்மூன்றையும் ஒன்றிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் , விருதுகளை வழங்கினார். இந்த விழாவிற்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன், அண்ணாவின் இதயத்தைக் கேட்டுப் பெற்றார் கலைஞர். ஆனால், கலைஞரின் இதயத்தைக் கேட்காமலேயே எடுத்து வைத்துக் கொண்டார் ஸ்டாலின். அதனால்தான் நாடே போற்றும் வகையில், பாராட்டுக்குரிய ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார் என தெரிவித்தார்.
இந்தியாவில் எட்டுத் திக்கிலும் ஸ்டாலின் புகழ் பாடப்படுகிறது.கலைஞர் முதல்வரான பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற புகழை எல்லாம் ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றிருக்கிறார். ஆட்சியைத் திறம்பட நடத்துபவர், கட்சியையும் கட்டிக் காப்பாற்றுகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக இயக்கத்தைத் தலைவர் கலைஞர் வழியில் இம்மி அளவும் பிசகாமல் நடத்திக்கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் துரைமுருகன் பேசியுள்ளார்.