டெல்லியில் நேருக்கு நேர் சந்தித்த இரு கட்சித் தலைவர்கள்..!
டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்களை எதிர்பாராத விதமாக சந்தித்தார்.
மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள துரை முருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை இன்று சந்தித்து மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரம், தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணை ஆகிய விவகாரங்கள் தொடர்பாக பேசினார்.
பின்னர் சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு துரைமுருகன் திரும்பினார். அப்போது, அதே தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர் காந்தி ஆகியோரும் சந்தித்து கொண்டனர்.
அனைவரும் பரஸ்பரம் நலம் விசாரித்தனர். அப்போது, செய்தியாளர் ஒருவர் உங்களுடைய நண்பர்கள் வந்திருக்காங்க என கேலியாக கூற அதற்கு துரைமுருகன் "தமிழ்நாடு தாண்டினால் அனைவரும் நண்பர்கள் தான்" என்று கூறி அங்கிருந்தவர்களை தனது பேச்சால் சிரிக்க வைத்தார்.