மருத்துவமனையில் மருந்து இல்லை..துாக்கி அடிங்க கன்னியாகுமரிக்கு... அமைச்சர் மா.சு-க்கு உத்தரவு போட்ட துரைமுருகன்
வேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்று தெரிவித்த மருத்துவர்களை கன்னியாகுமரிக்கு துாக்கி அடிங்க என்று அமைச்சர் மா.சுப்பிரமணிக்கு துரை முருகன் உத்தரவிட்டார்.
அமைச்சர்கள் ஆய்வு
வேலுார் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த மருந்து வழங்கும் ஊழியரிடம் பாம்பு கடிக்கு மருந்து எடுத்து வருமாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ஆனால் பாம்பு கடிக்கு மருந்து இல்லை என சுகாதார நிலையம் தரப்பில் கூறப்பட்டது. மேலும் எக்ஸ்ரே கருவி, மருத்துவர்கள் முறையாக இல்லை என்பதை அறிந்து கோபமடைந்த அமைச்சர் துரைமுருகன். துாக்கி அடிங்க அவுங்கள..கன்னியாகுமரிக்கு என அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் தெரிவித்தார்.
மருத்துவர்கள் பணியிட மாற்றம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன் “மருத்துவர்கள் உள்ளூரிலேயே இருப்பதால் சரியாக செயல்படவில்லை.
அதனால், பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடுகள் இல்லை. 38 மாவட்டங்களிலும் அரசு மருந்து கிடங்குகளில் மருந்துகள் உள்ளன. ஆனால், மருத்துவர்கள் முறையாக மருந்துகளைப் பெறாமல் இருப்பதால் தட்டுப்பாடு இருப்பது போல் இருக்கிறது” என்று தெரிவித்தார்.