கருணாநிதியை நினைத்து கண்கலங்கிய துரைமுருகன் - ஸ்டாலின் செய்த சிறப்பான சம்பவம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை நினைத்து திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் கண்ணீர்விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய உலக எக்ஸ்போ கண்காட்சி வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் மார்ச் 25 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படவுள்ளது. இந்த தமிழ்நாடு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு துபாய் சென்றார்.
இந்த கண்காட்சியில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ண காட்சிப்படங்கள் இடம்பெறவுள்ளது.
துபாய் கண்காட்சியில் தமிழக அரங்கு அமைக்கப்படுவதன் மூலம், பல உலக முதலீட்டாளர்கள் தமிழக தொழில்துறை பற்றியும் இங்குள்ள தனித்துவமான பல அம்சங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டசபையில் முதலமைச்சரின் இந்த பயணத்துக்கு அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தும் சொன்னார்.
பின்னர் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் இருக்கும் தொழிலதிபர்களை ஈர்ப்பதற்கு, முதலமைச்சர் ஸ்டாலினே முன்வந்து துபாய் போகிறார். இங்கேயே ஆயிரம் வேலைகள் இருக்கும்போதும் அவரே அடியெடுத்து கடல்கடந்து துபாய்க்கு சென்று பல்வேறு தொழிலதிபர்களுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட போகிறார்.
முதலமைச்சரே பலநாட்டு சர்வதேசர்கள் கூடுகின்ற துபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார் என்றால், அது தான் உலக செய்தி..இந்த 10 மாத காலத்தில் 100 ஆண்டுகால அனுபவத்தை போல செய்து முடித்துள்ளார். அவரை நான் மனதார பாராட்டுகிறேன். அப்போது தலைவர் கலைஞர் மட்டும் இப்போது இருந்திருந்தால் முதலமைச்சரின் பணியை பார்த்து கண்ணீரை வடித்திருப்பார்.
மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்பு அந்த கண்ணீரை துணியால் துடைக்கும் காட்சியை நான் நினைத்து பார்க்கிறேன். நீங்கள் இந்தியா மட்டுமல்ல உலக புகழ்பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என கூறினார். இந்த உரையின் போது துரைமுருகன் கண்கலங்கினார். இதனைப் பார்த்த மு.க.ஸ்டாலினும், மற்ற எம்.எல்.ஏ.க்களும் நெகிழ்ச்சியடைந்தனர்.