“சவாலுக்கு தயாரா?” - துரைமுருகன், எடப்பாடி பழனிசாமி மோதல்
சட்டசபையில் கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் தொடர்பான விவாதத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இன்று நடந்த தமிழக சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் உள்ள துணிகள் தரமற்ற துணிகளாக இருப்பதாக நேற்று கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பேசியதை குறிப்பிட்டதுடன் ஒரு விளக்கத்தையும் அளித்தார். அதில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கூட்டுறவு நெசவாளர் சங்கங்களிடம் இருந்துதான் துணிகளை கொள்முதல் செய்வதாகவும், அதனால் நெசவாளர்களை கொச்சைப்படுத்தக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட அவை முன்னவரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன், கடந்த ஆட்சிக்காலத்தல் கோ-ஆப்டெக்ஸ்ஸில் வாங்கிய துணிகள் தரமற்று இருந்ததால் தான் ரூ.4 கோடி செலவில் அதிமுக அரசால் விளம்பரம் செய்யப்பட்டு அதனை விற்பனை செய்ய முயன்றதாகவும், ஆகையால் வாங்கிய துணிகள் தரமற்றது என்று கூறியதில் தவறில்லை என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி அமைச்சர் துரைமுருகன் சமாளித்து பேசுகிறார் என்றும், துணிகள் தரமற்றது என்றால் பொதுமக்கள் அச்சப்படுவார்கள் என்று தெரிவித்ததோடு கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொரோனோ தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு ரூ.340 கோடி மானியம் வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு விளக்கமளித்த துரைமுருகன், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் நல்ல நிறுவனம் தான் என்றும், கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்படும் துணிகளில் தான் தரமில்லை என்று தெரிவித்ததோடு, கடந்த ஆட்சியைவிட தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திறம்பட செயல்படும் என தான் சவால் விடுவதாக கூறினார்.