"மொட்டைத்தலையன் குட்டையில் விழுந்தது போல் இருக்கிறது" - அதிமுகவை கலாய்த்த துரைமுருகன்
மொட்டை தலையன் குட்டையில் விழுந்தது போல இருக்கிறது என ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரின் நீட் தேர்வு நிலைபாடு குறித்து கலாய்த்துள்ளார் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் தெற்கு மாவட்ட திமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நேற்று சைதாப்பேட்டையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 56 வேட்பாளர்களையும் துரைமுருகன் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது, “கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அதிமுகவினர் என்ன செய்தனர் என்பது தெரியவில்லை.
கலைஞர் காலத்தில் 40 அணைகளை கட்டினார். ஒரே ஒரு அணையாவது இந்த பத்து ஆண்டு ஆட்சி காலத்தில் அதிமுகவினர் கட்டி இருக்கிறார்களா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், “நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தோம். ஆனால் இதில் தவறு உள்ளது என்று திருப்பி அனுப்பியிருக்கிறார் ஆளுநர்.
ஆளுநரின் வேலை மாநில அரசிடமிருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்றுவது தான். அதுமட்டுமல்லாது கிராமப்புற மக்கள் நீட் வேண்டாம் என்று கூறுவதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.
ஆளுநரின் நிலைப்பாடு இப்படி இருக்கும்போது நீட் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு மொட்டைத்தலையன் குட்டையில் விழுந்தது போல் இருக்கிறது.
இவர்கள் நீட்டை ஆதரிக்கிறார்களா எதிர்க்கிறார்களா என்பது அவர்களுக்கே தெரியவில்லை” என துரைமுருகன் பேசினார்.