ராஜினாமா முடிவை வாபஸ் பெற்ற துரை வைகோ - மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
துரை வைகோ ராஜினாமா
மதிமுகவின் முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததாக, வைகோவின் மகனும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ நேற்று அறிவித்தார்.
மேலும், தன்னால் இயக்கத்திற்கு எந்த சேதாரமும் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், மதிமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் தெரிவித்தார்.
கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது இருந்த அதிருப்தியின் காரணமாகவே, துரை வைகோ இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.
மதிமுக நிர்வாக குழு கூட்டம்
துரை வைகோ ராஜினாமா தொடர்பாக, மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் வைகோ முக்கிய முடிவு எடுப்பார் என்று மதிமுக பொருளாளர் செந்திலதிபன் கூறினார்.
இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்வது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து, துரை வைகோவின் ராஜினாமா தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், 40க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் துரை வைகோவுக்கு ஆதரவாக பேசி, அவர் தனது ராஜினாமா முடிவை திருமப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ராஜினாமா வாபஸ்
இதனையடுத்து பேசிய மல்லை சத்யா, "துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என முதன் முதலில் விரும்பியது நான்தான். மதிமுக நலனுக்கு எதிராக எந்த இடத்திலும் செயல்படவில்லை. துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.
நிர்வாகக் குழுவிலேயே ஒரு வாக்கெடுப்பும் நடத்தி என்னை மதிமுகவில் இருந்தே நீக்கிவிடுங்கள். கடைசி வரை வைகோவின் தொண்டனாக இருந்து விட்டுப் போகிறேன்" என பேசினார்.
அதை தொடர்ந்து, மனக்கசப்புகளை மறந்து, இருவரும் இணைந்து கட்சி பணியாற்றுமாறு துரை வைகோ மற்றும் மல்லை சத்யாவிற்கு வைகோ அறிவுரை கூறி சமாதானம் செய்துள்ளார்.
இதனையடுத்து, தனது ராஜினாமா கடித்தை வாபஸ் பெறுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.