'ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டீயா?' துரைமுருகன் வீட்டு சுவற்றில் எழுதிய திருடர்கள்
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பங்களாவில் திருட வந்தவர்கள் தங்கள் ஆதங்கத்தை நோட்டிலும், சுவற்றிலும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.கவின் பொதுச் செயலாளரான துரைமுருகனுக்கு திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சகொல்லையில் 25 ஏக்கரில் சொகுசு பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களாவில் பிரேம்குமார் (45) என்பவர் காவலாளியாக அங்கே தங்கி வருகிறார்.
இதனையடுத்து, கடந்த 12ம் தேதி பங்களா கதவை உடைத்து, வீட்டில் இருந்த இரண்டு பீரோவும் உடைக்கப்பட்டதை கண்டு பிரேம்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டைச் சுற்றி சோதனை நடத்தினர். அப்போது போலீசார் வீட்டை சுற்றி பார்க்கும் போது சுவற்றில், 'ஒரு 100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா' என திருடர்கள் எழுதி வைத்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அத்துடன், அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில், 'ஒரு ரூபாய் கூட இல்ல; எடுக்கல' எனவும், '100 ரூபாய் கூட வைக்கலேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு' எனவும் எழுதி வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. பங்களாவில் புகுந்த திருடர்கள் ரம்மி விளையாடி, சீட்டு கட்டுகளை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் துரைமுருகன் பங்களா அருகே உள்ள மற்ற பங்களாக்களில் இருக்கும் 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது துரைமுருகன் பங்களாவிற்கு காரில், 10 பேர் வந்து சென்றது தெரியவந்தது.
வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பங்களாவிலும், அதே நாளில் திருடர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கும் எதுவும் இல்லாததால், அங்கிருந்த குறிப்பு புத்தகத்திலும், சுவற்றிலும் இதே மாதிரி எழுதிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் கூறுகையில், கையெழுத்தை வைத்து அவர்களை பிடித்து விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது தான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் துரைமுருகன். இந்நிலையில், திருட வந்தவர்கள் இப்படி சுவற்றில் எழுதிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.