அதிமுக-வின் தேர்தல் அறிக்கை ரஜினி மாதிரிதான் - துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்த மாஃபா பாண்டியராஜன்
அதிமுக-வின் தேர்தல் அறிக்கை வில்லன் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்தார். அதற்கு பதிலடியாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எங்கள் தேர்தல் அறிக்கை ரஜினி மாதிரி என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது.
இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இச்சூழலில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் மேள தாளங்கள் முழங்க வாகன பேரணியாக வந்தார் மாஃபா பாண்டியராஜன்.
மனுவை தாக்கல் செய்து விட்டு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக தேர்தல் அறிக்கை முதலில் ரஜினி திரைத்துறையில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோ ஆகியது போன்றதுதான். முதலில் வில்லன் போன்றும் பின்னர் ஹீரோவாகவும் தெரியும். தற்போது திமுக தேர்தல் அறிக்கை செகண்ட் ஹீரோவாக உள்ளது.

காட்பாடி தொகுதியில் 10-வது முறையாக வேட்பு மனுதாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக பொதுச்செயலளார் துரைமுருகன், திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால், அதிமுக தேர்தல் அறிக்கை வில்லன் என்று விமர்சித்திருக்கிறார்.