துல்கர் பிறந்தநாள்: குவியும் ஸ்பெஷல் போஸ்டர்கள்... உற்சாகத்தில் ரசிகர்கள்!
துல்கர் சல்மான் பிறந்தநாளை அடுத்து அவர் நடித்து வரும் படங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான் தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகராக உருவெடுத்து வருகிறார்.
மலையாளம், தமிழ், இந்தி மொழிகளில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட துல்கர் தற்போது தெலுங்கிலும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இன்று துல்கர் சல்மான் பிறந்தநாள் கொண்டாடுவதை அடுத்து அவர் நடித்து வரும் படங்களில் இருந்து புதிய போஸ்டர்களை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

துல்கர் மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ‘சல்யூட்’ என்ற படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தை துல்கரின் சொந்த நிறுவனமே தயாரிக்கிறது. அந்தப் படத்தில் துல்கருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை டயானா பெண்டி நடித்துள்ளார். சல்யூட் படத்தில் துல்கர் மிரட்டல் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அந்தப் படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
துல்கர் சல்மானின் குருப் என்ற படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. துல்கர் சல்மான், சோபிதா துலிபாலா மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள குருப், கேரளாவின் மிகவும் பிரபலமான குற்றவாளிகளில் ஒருவரான சுகுமாரா குருப்பின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநாத் ராஜேந்திரன் மற்றும் வினி விஸ்வ லால் ஆகியோரால் இந்தப் படத்தை இயக்குகின்றனர். டோவினோ தாமஸ், சுரேஷ் ஓபராய், ஷைன் டாம் சாக்கோ, வாலிட் ரியாச்சி மற்றும் ஆனந்த் பால் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
துல்கர் தெலுங்கில் லெப்டினன்ட் ராம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இயக்குனர் ஹனு ராக்வபுடி இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்வப்னா சினிமா நிறுவனம் தற்போது இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். துல்கர் சல்மான் மெட்ராஸ் பட்டாலியனின் லெப்டினன்ட் ராம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

போர் முடிந்து தன் காதலியைச் சந்திக்க வரும் ராணுவ வீரனின் கதையை வைத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இந்தப் படத்திலிருந்து துல்கர் பிறந்தநாளை அடுத்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். மேலும் சிறப்பு முன்னோட்டமும் வெளியாகியுள்ளது.