உச்சம் தொடும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்
இலங்கையில் எரிவாயு உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் மூடப்பட உள்ளதால் அங்கு சிலிண்டர் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் எரிவாயு உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லிட்ரோ நிறுவனம் அதன் உற்பத்தி செலவு காரணமாக நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்நிறுவனம் விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் விளம்பர மேலாளர் கொழம்பஹெட்டிகே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 12.5 கிலோ கிராம் ஒரு சிலிண்டருக்கு ரூ.4,462 செலவிடப்பட வேண்டியுள்ளதாகவும், அது தற்போது ரூ.2, 675க்குதான் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய 12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் 2 ஆயிரம் ரூபாய் அதிகரிக்க வேண்டும். அப்படி இல்லாமல் தொடர்ந்தும் நஷ்டத்தில் எரிவாயுவை விநியோகித்தால் அடுத்த மூன்று மாதங்களில் நிறுவனத்தை மூடிம் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
லிட்ரோ நிறுவனம் 2021ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு மானிய விலையில் எரிவாயுவை வழங்கி வருவதால் கடந்தாண்டு மட்டும் ரூ.1,100 கோடி இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.