தண்ணீர் குடித்த 3000 வாத்துக் குஞ்சுகள் மர்மமான முறையில் மரணம்!
பாலாற்றில் தேங்கிய நீரை குடித்த 3000 வாத்து குஞ்சுகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரின் காட்பாடி அடுத்த சஞ்சீவிராயபுரத்தை சேர்ந்தவர் சுதாகர்(வயது 38), கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாத்து வளர்க்கும் தொழிலை செய்து வருகிறது. சமீபத்தில் பாலாற்றங்கரையில் குடில் அமைத்து கடந்த 38 நாட்களாக சுமார் 3000 வாத்து குஞ்சுகளை வளர்த்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற போது, தேங்கியிருந்த நீரை அருந்த விட்டுள்ளனர், சிறிது நேரத்திலேயே வாத்து குஞ்சுகள் துடிதுடித்து இறந்தன. இதைப்பார்த்த சுதாகர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வாத்து குஞ்சுகளை மீட்டு கரையில் விட்டுள்ளார், இருந்த போதும் 3000 குஞ்சுகளும் இறந்து போயின.
இதனால் மேலும் அதிர்ச்சிக்குள்ளான சுதாகர், கடன் வாங்கி வாத்துகளை வளர்த்து வந்ததாகவும், 5 லட்சரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே தகவலறிந்து வந்த வேலூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையினர், வாத்துகளை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றதுடன், தண்ணீர் மாதிரியையும் சேகரித்து சென்றனர்.