துபாயில் இருந்து விண்வெளி செல்லும் 28 வயது இளம்பெண்!
ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளி திட்டங்களின் ஒரு பகுதியாக நோரா அல் மட்ரூஷி என்ற 28 வயது இளம்பெண் விண்வெளிக்குச் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முகமது அல் முல்லா என்பவருடன் இணைந்து விண்வெளிக்குச்செல்லும் இவருக்கு, அமெரிக்காவின் நாசாவில் பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.அடிப்படையில் இயந்திர பொறியியல் பட்டதாரியான நோரா, அபுதாபியில் உள்ள பெட்ரோலிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.விண்வெளிக்கு செல்வதற்கான போட்டித் தேர்வில் 4 ஆயிரத்து 300 பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்திருந்த நிலையில் அறிவியல் திறன், கல்வி மற்றும் அனுபவம், உடற்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் நோரா அல் மட்ரூஷி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக துபாயின் முகமதுபின் ரஷீத் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நிலவுக்கு விண்கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. தவிர 2117 ஆம் ஆண்டு செவ்வாயில் குடியேறும் கனவுத் திட்டத்தையும் அந்நாடு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.