மாடியில் இருந்து விழுந்த பூனை - காப்பாற்றியவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு
துபாயில் 3வது மாடியில் இருந்து விழுந்த பூனையை காப்பாற்றியவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக நாடான துபாயின் டெய்ரா பகுதியில் அல் மராரில் உள்ளஅடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த பலர் வசித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் வீட்டில் பூனை வளர்க்கிறார்கள். இந்த பூனைகள் வீட்டில் இருந்து அவ்வப்போது வெளியேறி, வீட்டின் சுவர்களில் ஏறி அங்குமிங்கும் நடைபோடுவது வழக்கம்.
அந்த வகையில் குடியிருப்பின் 3வது மாடியின் பால்கனி பகுதியில் ஒரு பூனை அங்குமிங்கும் நடமாடி கொண்டிருந்த நிலையில் திடீரென தவறி விழுந்தது. இதனை அதே குடியிருப்பில் வசிக்கும் கேரளாவின் கோதமங்கலம் பகுதியை சேர்ந்த நசீர் முகமது என்பவர் பார்த்துள்ளார்.
உடனடியாக சுதாரித்த அவர், கோழிக்கோடு வடகரா பகுதியை சேர்ந்த அப்துல் ரசீத் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உதவியுடன் தன்னிடம் இருந்த துண்டை வலை போல் விரித்து பூனையை பத்திரமாக மீட்டார்.
இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பாராட்டை பெற்ற நிலையில், துபாய் நாட்டின் துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷீத் கவனத்திற்கும் சென்றது. 4 பேரையும் நேரில் அழைத்து பாராட்டிய அவர் ரூ.10 லட்சம் பரிசும் வழங்கியுள்ளார்.