இனி ஆர்சிபி-யின் புதிய கேப்டன் இவர் தானா? - இறுதி முடிவை எடுத்த அணி நிர்வாகம்
ஆர்சிபி-யின் புதிய கேப்டன் குறித்து அணி நிர்வாகம் இறுதி முடிவை எடுத்துள்ளது.
வருகிற மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ள நடப்பாண்டு ஐபிஎல் 15-வது சீசனுக்கான போட்டி அட்டவணையை நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
அதன்படி மார்ச் 26-ம் தேதி தொடங்கும் இந்த தொடர் மே 29-ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் மாலை தொடங்கவுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதனையடுத்து ஒவ்வொரு அணியும் தங்களது ஜெர்ஸி, அணி மாற்றங்கள் குறித்த புதிய அப்டேட்டுகளை தெரிவித்து வருகின்றன.
இந்தாண்டு புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள், தங்கள் அணியின் கேப்டன் யார் என்பது குறித்தும் அணியின் பெயர் மற்றும் லோகோ குறித்தும் அறிவித்துவிட்டன.
ஆனால் முன்னணி அணியாக திகழும் பெங்களூரு அணி, இன்னும் தங்கள் அணியின் கேப்டன் யார் என்பது குறித்து அறிவிக்காமல் இருக்கிறது.
இதற்கு காரணம் 3 சீனியர் வீரர்கள் போட்டியாக பட்டியலில் இருப்பது தான். விராட் கோலிக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸ், தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் ஆகியோர் கேப்டன் பதவிக்கான பட்டியலில் இருந்தனர்.
இதிலிருந்து அனுபவம், வெற்றிகள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கேப்டன் யார் என்பதை தேர்ந்தெடுக்க தான் நீண்ட ஆலோசனை நடந்து வந்ததாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரராக இருந்து இம்முறை பெங்களூரு அணியில் சேர்க்கப்பட்டுள்ள டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டன் என இறுதி செய்யப்பட்டுள்ளது.
விராட் கோலிக்கு அடுத்தபடியாக டூப்ளசிஸிக்கு தான் சர்வதேச அளவில் கேப்டன்சி உள்ளது. இதே போல ஐபிஎல் தொடரிலும் நீண்ட அனுபவம் உள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.