பேரறிவாளன் விடுதலை...எதிர்ப்பு தெரிவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்... வைரலாகும் வீடியோ

Rajiv Gandhi A. G. Perarivalan
By Petchi Avudaiappan May 18, 2022 10:58 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் போன்றோர் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர்.

இதில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநில அமைச்சரவை தனக்குரிய சட்ட அதிகார பிரிவின் கீழ் முடிவெடுத்து ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பும் விஷயம் மீது ஆளுநர் அதில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை செலுத்த முடியாது என தெரிவித்து ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்வதாக உத்தரவிட்டனர்.

அவரது விடுதலையை தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இதனை வரவேற்று நிலையில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

இந்நிலையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் காயமடைந்த ஓய்வு பெற்ற பெண் காவல்துறை அதிகாரி அனுஷ்யா ஏர்னஸ்ட் முன்னதாக அளித்த பேட்டியில் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்பை இன்றளவும் அனுபவித்து வருவதாக தெரிவித்திருந்தார். தற்போது பேரறிவாளன் விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்கள் என்றால் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் வெளிநாட்டவர்களா? அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார். 

மேலும் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்வார்கள். அவர்கள் தமிழர்கள் என்றால் விடுதலை கொடுப்பார்கள்.  அவர்கள் தமிழர்கள் என்றால் நாங்கள் யார்? என ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதேபோல் இந்த சம்பவத்தில் தனது தாயை இழந்த அப்பாஸ் என்பவர், இந்த தீர்ப்பு 16 குடும்பங்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறியுள்ளார். 

ஒருநாள் சிறையில் இருந்து பாருங்கள் என்று அற்புதம்மாள் கூறுகிறார்கள். அது மிகக் கடினமானது தான். ஆனால்  31 ஆண்டுகள் தாய், தந்தையை பிரிந்து கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம், வாழ்க்கையில் எல்லாம் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.