போதையில் தன்னைத் தானே குத்திக் கொண்டு உயிரிழந்த இளைஞர் - ஹோலி கொண்டாட்டத்தில் விபரீதம்
மத்தியப் பிரதேசத்தில் போதையில் தன்னைத் தானே குத்திக் கொண்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் ஒரு சில ஆண்கள் போதையில் வண்ண தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாலிவுட் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டனர்.
அதில் கோபால் சோலாங்கி என்ற 38 வயது இளைஞர் கையில் கத்தியுடன் மதுபோதையில் உற்சாக மிகுதியில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். திடீரென அந்த நபர் ஆடிக் கொண்டே தனது இதயத்தில் வேகமாக கத்தியை சொருகினார். இதனால் ரத்த வெள்ளத்த்தில் சரிந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.