மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.70 கோடி மதிப்புள்ள போதை பொருள் - 2 பேர் கைது..
மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து 10 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்திவந்த 2 வெளிநாட்டு பெண்கள் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
சா்வதேச போதை கடத்தும் கும்பல் சென்னைக்கு பெரிய அளவில் போதைப்பொருட்கள் கடத்தி வருவதாக சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் நேற்று இரவிலிருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனா்.
இந்நிலையில் இன்று அதிகாலை கத்தாா் நாட்டு தலைநகா் தாஹாவிலிருந்து சிறப்பு பயணிகள் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் தீவிரமாக கண்காணித்தனா்.அப்போது ஒரு வெளிநாட்டு பெண் பயணியை சக்கர நாற்காலியில் வைத்து மற்றொரு வெளிநாட்டு பெண் தள்ளிக்கொண்டு வந்தாா்.ஆனால் சக்கர நாற்காலியில் இருந்த சுமாா் 45 வயது பெண் உடல்நலம் பாதித்தவா் போல் இல்லை.
இதையடுத்து சந்தேகமடைந்த சுங்கத்துறையினா்,அப்பெண்களை நிறுத்தி விசாரித்தனா்.அப்போது சக்கர நாற்காலியில் வந்த பெண் ஜிம்பாவே நாட்டை சோ்ந்தவா் என்றும், அவா் இதய நோயாளி என்பதால் சிகிச்சைக்காக மருத்துவ விசாவில் சென்னை வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். அதேபோல் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்த சுமாா் 30 வயது பெண் தெற்கு ஆப்ரிக்கா நாட்டை சோ்ந்தவா் என்றும் ஜிம்பாவே பெண்ணுக்கு மருத்துவ உதவியாளராக,அவரும் மருத்துவ விசாவில் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அவா்களிடம் சென்னையில் எந்த மருத்துவமனைக்கு செல்கின்றனா் என்ற விபரங்கள் இல்லை. மேலும் அவர்கள் சென்னைக்கு வந்து டெல்லி மருத்துவமனைக்கு செல்வதாக மாற்றி மாற்றி பேசியுள்ளனா். இதையடுத்து சுங்கத்துறையினருக்கு சந்தேகம் வலுக்கவே இரு வெளிநாட்டு பெண்களையும் தனி அறைக்கு அழைத்து சென்று பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன் சோதனையிட்டனா்.
அப்போது அவா்கள் வைத்திருந்த டிராலி சூட்கேஸ்,பைகளில் மொத்தம் 10 கிலோ ஹெராயின் போதைப் பொருட்கள் இருந்தன.அதன் சா்வதேச மதிப்பு ரூ.70 கோடி ஆகும். இதனைத் தொடர்ந்து சுங்கத்துறையினா் இருவரையும் கைது செய்து போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனா்.