மாடு மேய்க்கும் சிறுவனுக்கு பதவி - பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் கொடுத்த ஷாக்
பாமகவில் மாடு மேய்க்கும் சிறுவனுக்கு பொறுப்பு வழங்க போவதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு தடை உத்தரவு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் வரும் தேர்தலில் பாமக வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும் என்றும், இதற்காக திண்ணைப்பிரசாரம், சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் ராமதாஸ் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் உள்கட்சி பிரச்னையால் தான் கடலூர் மாவட்டத்தில் தோல்வி அடைந்தோம். கட்சிக்கு ஓட்டு வாங்கி தர முடியவில்லை என்றால் மாடு மேய்க்கும் சிறுவன் தான் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டி இருக்கும் எனக் கூறியது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.