கொரோனா ஊரடங்கு: சிவகங்கையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது
முழு ஊரடங்கின் போது சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது.
கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இதனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதி விற்பனை அதிகமாக நடைபெற்றது. நேற்று மட்டும் 250 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாபட்டு பகுதியில் வசிக்கும் நாராயணன் என்ற முதியவர் தனது வீட்டின் பின்புறம் குழி தோண்டி அதில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து திருப்பத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் வந்ததையடுத்து, நாராயணன் வீட்டிற்கு சென்று போலீசார், சோதனை செய்ததில் வீட்டின் பின்புறம் குழிதோண்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 42 மதுபாட்டில்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பின்பு நாராயணனை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.